கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் 217 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சில டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடை வாடகை, பராமரிப்பு செலவு, காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டச் செலவு உள்ளிட்டவற்றுக்கு தெளிவான ஏற்பாடு இல்லாததால் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். புகார்களின் அடிப்படையில் உரிய விசாரணையின்றி சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர். மூடப்பட்ட கடைகளை தற்காலிக ஊழியர்கள் மூலம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



















