தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை 1 லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்தார்.
முதலமைச்சர் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-
பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் உழைப்பையும், தீவனம் மற்றும் வேலையாட்களின் கூலி உள்ளிட்ட அதிகரித்து வரும் செலவுகளையும் கடந்த கால அரசு போதிய அளவில் கருத்தில் கொள்ளவில்லை. உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்துள்ளது.
கடந்த காலத்தில் கொள்முதல் விலை உரிய அளவில் உயர்த்தப்படாத நிலையில், நம் அரசு சந்தித்து வரும் அதிகப்படியான நிதி நெருக்கடியிலும் பால் உற்பத்தியாளர்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, அவர்களின் உன்னதமான உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்கும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்துவது நமது அரசின் கடமையாகும்.
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3 லட்சத்து 16 ஆயிரத்திற்கு மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில், பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக 1 ரூபாய் உயர்த்தவும், மேலும், அரசு ஊக்கத்தொகை 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தவும், ஆக மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்திற்கு ரூபாய் 30 கோடியும், ஒரு ஆண்டிற்கு 360 கோடியும் செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


















