திண்டுக்கல்லில் காரின் மேற்கூரையில் கவனக்குறைவாக வைக்கப்பட்டிருந்த 50 சவரன் நகைகள் அடங்கிய பெட்டி சாலையில் தவறி விழுந்த சம்பவத்தில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி நகைகளை மீட்டுள்ளனர்.
அருண்குமார் என்பவர் கடந்த 30-ஆம் தேதி தனது சகோதரியின் இல்ல நிகழ்வில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டுள்ளார். அப்போது சுமார் 50 சவரன் நகைகள் இருந்த பெட்டியை காரின் மேலே வைத்த அவர், அதனை எடுக்க மறந்து காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
திண்டுக்கல்-பழனி பைபாஸ் சாலையில் சென்றபோது, காரின் மேலிருந்த நகைப்பெட்டி சாலையில் தவறி விழுந்துள்ளது. இதனை அறியாத அருண்குமார் தொடர்ந்து சென்றுள்ளார்.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திண்டுக்கல் காவல் நிலைய போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சாலையில் கிடந்த நகைப்பெட்டியை இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், பால் வியாபாரியான குழந்தை ராஜை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், நகைகளில் 20 சவரனை வங்கியில் அடகு வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்த நகைகள் மற்றும் அடகு வைக்கப்பட்ட நகைகள் என மொத்த நகைகளையும் போலீசார் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட நகைகள் அருண்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
சிசிடிவி காட்சிகளை வைத்து துரிதமாக செயல்பட்டு, குறுகிய காலத்தில் 50 சவரன் நகைகளை மீட்ட போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


















