தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மாற்றங்களால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழக பகுதிகள் வழியாக சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. மேலும், கடலோர தமிழகத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சுமார் 7.6 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சியும் காணப்படுகிறது.
இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மழையின்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உள் தமிழகத்தில் வரும் 8-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


















