சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு டெலிவரிக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை பொதுமக்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையில், முன்பதிவு செய்த 4 மணி நேரத்திற்குள் சமையல் எரிவாயு சிலிண்டரை வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்க்கும் புதிய சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் இந்தியன் ஆயில் நிறுவனம் 10 கிலோ எடை கொண்ட ‘இண்டேன் எக்ஸ்ட்ரா லைட்’ சிலிண்டரை அறிமுகப்படுத்தியது. வழக்கமான உலோக சிலிண்டர்களுக்கு மாற்றாக, சிறப்பு பிளாஸ்டிக் மற்றும் ஃபைபர் பொருட்களால் இந்த சிலிண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமாக, சிலிண்டருக்குள் இருக்கும் எரிவாயுவின் அளவை வெளிப்புறத்தில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும்.
ஏற்கனவே இண்டேன் இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், எக்ஸ்ட்ரா லைட் சிலிண்டரை பெறுவதற்கு ரூ.3,000 பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்த வேண்டும். ஏற்கனவே பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்தியவர்கள், அதற்கான மீதமுள்ள தொகையை மட்டும் செலுத்தி புதிய சிலிண்டரைப் பெற்றுக்கொள்ளலாம்.
முதற்கட்டமாக சில நகரங்களில் செயல்படுத்தப்பட்ட இந்த விரைவு டெலிவரி சேவை தற்போது சென்னை மற்றும் புதுச்சேரிக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் 10 கிலோ எடை கொண்ட இண்டேன் எக்ஸ்ட்ரா லைட் சிலிண்டரை முன்பதிவு செய்து, அதிகபட்சம் 4 மணி நேரத்திற்குள் வீட்டிலேயே பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


















