தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 30 வரை டெங்குவால் 13,573 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 2,584 பேரும், கோவையில் 1,999 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்டில் 1,832 ஆக இருந்த டெங்கு பாதிப்பு, இந்த ஆண்டு ஆகஸ்டில் 3,315 ஆக உயர்ந்துள்ளது.
பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் 1,558 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் 46 ஆக இருந்த பாதிப்பு, இந்த ஆண்டு ஆகஸ்டில் 645 ஆக அதிகரித்துள்ளது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் முகக்கவசம் அணிவதுடன், பிறரிடமிருந்து விலகி குறைந்தது 5 நாட்கள் தனிமையில் இருந்து உரிய சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சுற்றுப்புறத் தூய்மை, கொசு ஒழிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.



















