பறவைக் காய்ச்சல் தொற்று காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, நாளை (அக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் பார்வையாளர்களுக்காகத் திறக்கப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், பறவைகள் உள்ள பகுதிகளுக்குச் செல்லத் தடை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சலால் பூங்கா மூடல்
சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள நீர்வாழ் பறவைகளுக்கு H5N1 வகை பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்தின் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 22ஆம் தேதி முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து பூங்கா வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்தல், தூய்மைப் பணிகள் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
26 ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை
பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 22ஆம் தேதி விலங்கு பராமரிப்புப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள 26 ஊழியர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
அந்த மாதிரிகள் அனைத்தும் ஆர்டி-பிசிஆர் முறையில் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 26 பேருக்கும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.





















