சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே குளிர்சாதன வசதியுடன் கூடிய (ஏ.சி.) புறநகர் மின்சார ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினசரி ரயிலில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு கூடுதல் போக்குவரத்து வசதி கிடைக்கிறது.
சென்னையில் புறநகர் மின்சார ரயில்களை நம்பி நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் அலுவலக ஊழியர்கள், மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில், பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் குளிர்சாதன வசதியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த ரயில் சேவை டிசம்பர் 24-ஆம் தேதி வரை சோதனை அடிப்படையில் இயக்கப்படும். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயக்கப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சேவை கிடையாது.
ஏ.சி. ரயில் இயக்க நேரம்
| வழித்தடம் | புறப்படும் நேரம் | சென்றடையும் நேரம் |
|---|---|---|
| ஆவடி – அரக்கோணம் | காலை 6.30 | காலை 7.45 |
| அரக்கோணம் – சென்ட்ரல் | காலை 8.00 | காலை 9.30 |
| சென்ட்ரல் – ஆவடி | காலை 9.40 | காலை 10.25 |
| ஆவடி – சென்ட்ரல் | மாலை 5.25 | மாலை 6.10 |
| சென்ட்ரல் – அரக்கோணம் | மாலை 6.30 | இரவு 7.55 |
| அரக்கோணம் – ஆவடி | இரவு 8.10 | இரவு 9.10 |
இந்த 12 பெட்டிகள் கொண்ட ஏ.சி. ரயிலில் ஒரே நேரத்தில் சுமார் 5,000 பயணிகள் பயணம் செய்ய முடியும். தானியங்கி கதவுகள், கண்காணிப்பு கேமராக்கள், ஜி.பி.எஸ். அடிப்படையிலான தகவல் திரைகள் உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.
குறைந்தபட்ச பயணக் கட்டணம் ரூ.35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயண தூரத்திற்கு ஏற்ப கட்டணம் அதிகரிக்கும்.
ஏற்கனவே சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்திலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.





















