தமிழகத்தில் சன்னரக அரிசி என்ற பெயரில் இலவச ரேஷன் அரிசியையே கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்வதாக எழுந்துள்ள புகார்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடிகள் மூலம் சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் சன்னரக அரிசி விற்பனையை சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்தார். அப்போது அரிசியை வாங்கிய பொதுமக்கள், இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியையே ரூ.30-க்கு விற்பனை செய்வதாகக் குற்றம்சாட்டி, வாங்கிய அரிசியைத் திருப்பிக் கொடுத்து பணத்தைப் பெற்றுச் சென்றனர்.
இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய டிடிவி தினகரன், இலவச ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து சன்னரக அரிசி என்ற பெயரில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து ஏமாற்ற முயற்சிக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், திட்டத்தைப் பிரம்மாண்டமாகத் தொடங்கி வைத்த அமைச்சர்கள், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அரிசியின் தரத்தை முறையாகப் பரிசோதித்தார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.





















