சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெரினா கலங்கரை விளக்கம் (லைட்ஹவுஸ்) முதல் அடையாறு பாலம் வரையிலான பகுதியில் புதிய உயர்மட்ட சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை முன்னெடுத்துள்ளது.சென்னையில் சாந்தோம் நெடுஞ்சாலை, பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் புதிய உயர்மட்ட சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் இருந்து லூப் சாலை வழியாக அடையாறு மலர் மருத்துவமனை அருகே இணையும் வகையில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.மேலும், இந்த உயர்மட்ட சாலையின் நீளம், அகலம், தூண்கள் அமைக்கும் இடங்கள், நிலம் கையகப்படுத்தும் தேவை மற்றும் திட்டத்திற்கான செலவு உள்ளிட்ட விவரங்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னரே இறுதி செய்யப்படும்.
சென்னையில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள 5 முக்கிய சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிக்க மொத்தம் ரூ.98 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வியாசர்பாடி மேம்பால விரிவாக்கம், பேசின் பாலம் அகலப்படுத்துதல், கோயம்பேடு கூவம் ஆற்றுப் பாலம் விரிவாக்கம் மற்றும் ஓஎம்ஆர்–இசிஆர் இணைப்புச் சாலை ஆகிய திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தேவையான ஒப்புதல்கள் கிடைத்த பின்னரே கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.இந்த உயர்மட்ட சாலை பயன்பாட்டுக்கு வந்தால், சாந்தோம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், மெரினா கடற்கரைப் பகுதியில் இருந்து அடையாறு நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகளின் பயண நேரமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















