வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகக் கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் அக்டோபர் 21ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இதனுடன் தொடர்புடைய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடல் மட்டத்திலிருந்து 5.8 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவுகிறது.
இதற்கிடையே, வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை (அக்டோபர் 23) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
இன்று (அக்டோபர் 22) தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி உள்ளிட்ட 17 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (அக்டோபர் 23) கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழை நிலவரம்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 25ஆம் தேதி சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது வானிலை எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





















