தமிழகத்தில் நிலவும் மின்சாரத் தேவையைச் சமாளிக்கவும், மின்வெட்டைத் தவிர்க்கவும் வெளிச்சந்தையில் இருந்து கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான 4-வது குறுகிய கால டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மின்வெட்டு தொடர்பான புகார்கள் எழுந்து வரும் நிலையில், பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயிகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் மின்வாரியம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே மூன்று கட்டங்களாக மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டிருந்தன. குறிப்பாக, நவம்பர் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை தினமும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான உச்சபட்ச மின்தேவையைச் சமாளிக்க மாதந்தோறும் 1,000 மெகாவாட் வீதம் மின்சாரம் கொள்முதல் செய்ய மூன்றாவது டெண்டர் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், நான்காவது குறுகிய கால மின்சாரக் கொள்முதல் டெண்டர் அக்டோபர் 22-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை உச்சபட்ச மின்தேவை நேரங்கள் உள்ளிட்ட காலப்பகுதிகளுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்த டெண்டருக்கு அக்டோபர் 27-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை விண்ணப்பிக்கலாம். அன்று பிற்பகல் 1 மணிக்கு டெண்டர் திறக்கப்படும் என மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மின்தட்டுப்பாட்டைச் சமாளிக்க தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 என்ற விலையில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக வெளியான தகவல்கள் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தன.
தற்போது நான்காவது முறையாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் அளவு மற்றும் விலை குறித்த விவரங்கள் ஒப்பந்த நடைமுறைகள் நிறைவடைந்த பின்னரே தெரியவரும்.





















