அக்டோபர் 24
தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு மற்றும் நில அளவைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் முயற்சி ஆபத்தானது என்றும், இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுவதுடன், அரசு ஊழியர்களின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் அன்றாடத் தேவைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய பத்திரப் பதிவு மற்றும் நில அளவைப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
5 இடங்களில் தனியார் பத்திரப் பதிவு மையங்கள்
சென்னையில் அம்பத்தூர், திருவான்மியூர், தியாகராய நகர் மற்றும் செங்கல்பட்டு, கோவை ஆகிய ஐந்து இடங்களில் தனியார் பங்களிப்புடன் முன்மாதிரி பத்திரப் பதிவு மையங்களை அமைப்பதற்கு தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளிகள் கோரியுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
இந்த மையங்கள் குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் வணிக வளாகங்களில் அமைக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் பத்திரங்களைப் பதிவு செய்துகொள்ளும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த மையங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து கூடுதலாக 20 இடங்களில் மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.10,630 வரை கூடுதல் கட்டணம் – அன்புமணி எதிர்ப்பு
இந்த மையங்களில் பத்திரப் பதிவு செய்வதற்கு வழக்கமான அரசுக் கட்டணங்களுடன் ரூ.2,090 முதல் ரூ.10,630 வரை கூடுதல் சேவைக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுவதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே 56 பதிவு மாவட்டங்களில் 595 பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், புதிய தனியார் மையங்களை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடப்பாண்டில் பதிவுத்துறைக்கு ரூ.35,109 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு சதவீதத்தைச் செலவிட்டாலே அரசு பதிவு அலுவலகங்களில் நவீன வசதிகளை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





















