விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அக்டோபர் 23ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
இதன்படி, திட்டமிடப்பட்ட விமான சேவை நிறுவனங்களின் விமானங்களுக்கு சென்னை விமான நிலையத்தில் நிரப்பப்படும் எரிபொருளுக்கான வாட் வரி 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகவும், தமிழகத்தின் பிற விமான நிலையங்களில் 29 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது
மேலும், அதிகபட்சப் புறப்பாட்டு எடை 40,000 கிலோவுக்குக் குறைவாக உள்ள சிறிய விமானங்களுக்கு, சென்னை தவிர பிற விமான நிலையங்களில் வழங்கப்படும் எரிபொருளுக்கான வரி 5 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிச் சலுகைகள் நவம்பர் 1 முதல் 2027 அக்டோபர் 31 வரை அமலில் இருக்கும்.
இந்த நடவடிக்கை விமான நிறுவனங்களின் இயக்கச் செலவைக் குறைத்து, தமிழக நகரங்களுக்கு இடையிலான விமான சேவைகளை விரிவுபடுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணக் கட்டணங்களில் ஏற்படும் மாற்றம் விமான நிறுவனங்களின் விலை நிர்ணயத்தைப் பொறுத்தே அமையும்.





















