பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 25) உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது புதிய ஆடை உற்பத்தித் தொழிற்சாலை, இந்திய ரிசர்வ் வங்கியின் தரவு மையம் மற்றும் இணையப் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும், வாரணாசியில் நடைபெறும் இந்திய விமானப்படையின் பிரம்மாண்ட வான்வழி சாகச நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளதாகப் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
வாரணாசியில் புதிய ஆடை உற்பத்தித் தொழிற்சாலை திறப்பு!
நாளை காலை 11 மணியளவில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசிக்குச் செல்லும் பிரதமர் மோடி, அரவிந்த் லிமிடெட் நிறுவனத்தின் புதிய ஆடை உற்பத்தித் தொழிற்சாலையைத் திறந்து வைக்கிறார்.
இந்தத் தொழிற்சாலை மூலம் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தித் துறை வளர்ச்சி அடைவதுடன், குறிப்பாகப் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு தயாரிக்கப்படும் ஆடைகள் சர்வதேசச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வகையில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
விமானப்படையின் பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சியில் பங்கேற்பு!
தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில் வாரணாசியில் உள்ள நமோ படித்துறையில் நடைபெறும் இந்திய விமானப்படையின் 94ஆவது ஆண்டு விழா வான்வழி சாகச நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
‘Wings over Ganges’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தேஜஸ், ரஃபேல், சுகோய் SU-30MKI மற்றும் பிரசண்ட் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை பங்கேற்க உள்ளன.
மேலும், சூர்ய கிரண் விமான சாகசக் குழு மற்றும் சாரங் ஹெலிகாப்டர் சாகசக் குழுவினரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்





















