சேலம் மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் குறைத்து, விபத்தில்லா சேலையை உருவாக்கும் நோக்கில் போக்குவரத்து போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலைகளில் தடுப்புகள் அமைத்தல், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை போக்குவரத்து விதிகளை மீறியவர்களைக் கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், வாகனங்களில் அதிக ஆட்களை ஏற்றிச் செல்லுதல், லாரிகளில் அதிக பாரம் ஏற்றுதல் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக மொத்தம் 2,610 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலை விபத்துகளைக் குறைத்து, விபத்தில்லா சேலம் மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.













