தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன், செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் நகர்ப்புறங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைக்கு தலா 1 கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்தார்.
முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், நகர்ப்புறங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள், கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் அமுதம் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை தற்போது கிலோ ரூ.56 முதல் ரூ.60 வரை உயர்ந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


















