சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பெண் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த 2 பெண் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களது சூட்கேஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கடத்தலின் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில், தாய்லாந்தில் இருந்து வரும் விமானப் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.



















