ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் நிறுத்தும் பணியின்போது கம்பத்தில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவி மும்பையில் இருந்து ஸ்ரீநகருக்கு வந்த இண்டிகோ 6E 225 விமானம், வெள்ளிக்கிழமை காலை சுமார் 9.02 மணியளவில், விமான நிலையத்தின் 6-வது பேயில் நிறுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு பொருத்தப்பட்டிருந்த Visual Docking Guidance System (VDGS) கம்பத்தில் விமானம் மோதியது.
மோதலில் விமானத்தின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களும் காயமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பயணிகள் விமானத்திலிருந்து கையேடு படிக்கட்டுகள் மூலம் இறக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் ஸ்ரீநகர் விமான நிலையத்தின் வழக்கமான விமான சேவைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விமானம் கம்பத்தில் எவ்வாறு மோதியது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகே விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



















