தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 கோவில்களில் இன்று (செப்.1) முதல் செல்போன் கொண்டு செல்ல தடை அமலுக்கு வந்துள்ளது. .
கோவில் வளாகங்களில் புகைப்படம், வீடியோ, செல்ஃபி மற்றும் ரீல்ஸ் எடுப்பதைத் தடுப்பதும் இந்த கட்டுப்பாட்டின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் பக்தர்கள் இடையூறு இல்லாமல் இறைவனை தரிசிக்கவும், கோவில் வளாகத்தின் ஆன்மிகச் சூழலை பாதுகாக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களை நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒரு செல்போனை பாதுகாப்பாக வைப்பதற்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும். செல்போனை ஒப்படைத்த பிறகு பக்தர்களுக்கு ரசீது வழங்கப்படும். தரிசனம் முடிந்ததும் அந்த ரசீதை காண்பித்து செல்போனை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், கேமரா வசதி இல்லாத சாதாரண மொபைல் போன்களுக்கு இந்தத் தடை பொருந்தாது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், பார்த்தசாரதி கோவில், காமாட்சி அம்மன் கோவில், திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட முக்கிய திருக்கோவில்களிலும் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட சில முக்கிய கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த கட்டுப்பாடு மொத்தம் 52 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் கோவில் நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு ஒத்துழைத்து, செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பாதுகாப்பாக ஒப்படைத்து தரிசனம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


















