சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய ஒருங்கிணைந்த நிர்வாக வளாகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் உள்ளிட்ட புதிய கட்டட வளாகம், சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நிர்வாக வளாகத்தில் தீயணைப்பு பாதுகாப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்றுவரும் வகையிலான கட்டமைப்புகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு ஏற்ப நவீன வசதிகள் இடம்பெறும்.
மேலும், போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்களுக்கான சேவை மையங்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான நவீன பணிச்சூழல் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்திற்குள் கொண்டு வந்து ஒருங்கிணைப்பதன் மூலம் நிர்வாகப் பணிகளை மேலும் திறம்பட மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


















