பா.ரஞ்சித் இயக்கத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் 2-ம் பாகம் தற்போது படப்பிடிப்புக்குச் சென்றுள்ளது.

இதனை இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘சார்பட்டா பரம்பரையின் மூலம் தொடங்குகிறது. சார்பட்டா பரம்பரை 2’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனுடன் அவர் பகிர்ந்துள்ள போஸ்டரில், குத்துச்சண்டை களத்தை மையமாக வைத்து ‘தி ஆரிஜின் ஆஃப் சார்பட்டா பரம்பரை – ரவுண்ட் 2’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
2-ம் பாகத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளையில், படத்தின் தயாரிப்பாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கிரிஷ் மாத்ருபூதம், பா.ரஞ்சித் மற்றும் நடிகர் ஆர்யாவின் மனைவி சாவிஷா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.
வடசென்னையில் இயங்கி வந்த இரு குத்துச்சண்டை பரம்பரைகளுக்கு இடையிலான மோதலை மையமாகக் கொண்டு உருவான இப்படம், குத்துச்சண்டை மட்டுமின்றி அந்தக் காலகட்டத்தின் வடசென்னை வாழ்க்கை, விளையாட்டு மற்றும் அரசியல் சூழலையும் பதிவு செய்திருந்தது.
வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகத் தொடங்கியிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.





















