காந்தி ஜெயந்தியான நாளை (அக்டோபர் 2) தமிழகம் முழுவதும் கடைகளில் UPI மற்றும் QR Code பணப் பரிவர்த்தனைகளை ஒருநாள் நிறுத்தி, ரொக்கப் பணப் பரிவர்த்தனை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் எஸ். சவுந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகரீதியான UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஒருநாள் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகளில் UPI வசதி நிறுத்தப்படுவது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த அறிவிப்பு பலகைகளையும் வைக்க வேண்டும் என்று பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.
தேசிய அளவில் அக்டோபர் 2-க்கு அறிவிக்கப்பட்டிருந்த ‘No UPI Day’ போராட்டத்திலிருந்து AICPDF மற்றும் AIMRA ஆகிய இரு வணிக அமைப்புகள் விலகியுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த பின்னர் அவை இந்த முடிவை எடுத்தன. ஆனால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தனியாக தமிழக வணிகர்களுக்கு UPI-ஐ ஒருநாள் நிறுத்துமாறு இன்று அழைப்பு விடுத்துள்ளது.





















