மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து தெரிவித்த கருத்துகள் தொடர்பாகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விடுவித்து சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, அப்போதைய பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித் ஷா குறித்து ராகுல் காந்தி அவதூறாகப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பாஜக பிரமுகர் விஜய் மிஸ்ரா, 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சுல்தான்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றம், அக்டோபர் 26-ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், வழக்கில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் அவதூறானவை அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின்கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்து ராகுல் காந்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.





















