சென்னையில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாமல் இருப்பதாகக் கூறி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா குடிநீர் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு இலவசமாகச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் ஏராளமான ஏழை, எளிய குடும்பங்கள் பயனடைந்து வந்தன.
இந்நிலையில், சென்னையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாமல் இருப்பதால், பொதுமக்கள் குடிநீருக்காகக் கூடுதல் பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, 20 லிட்டர் குடிநீர் கேன் ஒன்றுக்கு ரூ.40 வரை செலவிட வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில், குடிநீருக்கும் பணம் செலவழிக்க வேண்டியிருப்பது ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சென்னையில் செயல்படாமல் உள்ள அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை உடனடியாக ஆய்வு செய்து, தேவையான சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இலவசமாகச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.




















