பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அரசியல் கட்சிகளிடையே கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்ட பதிவில், முறையான அனுமதியுடன் அமைதியாகப் போராடிய செவிலியர்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்று பின்னர் கைது செய்ததாகக் கூறப்படும் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் என குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பு செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து, பணி நிரந்தரம் தொடர்பாக வாக்குறுதி அளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே கோரிக்கைக்காக போராடுபவர்கள் மீது காவல்துறையை பயன்படுத்துவது ஏற்க முடியாதது என்றும் தினகரன் விமர்சித்துள்ளார்.
மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களின் உயிரைக் காக்க முன்களத்தில் பணியாற்றிய செவிலியர்களின் பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





















