‘பத்தா’ வெற்றி விழாவில் விஜய் சேதுபதி பேச்சு

விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்த இப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து படக்குழுவினர் சென்னையில் வெற்றி விழாவை நடத்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, “இந்த வெற்றியையும் கொண்டாட்டத்தையும் எங்களுக்கு அளித்த ரசிகர்களுக்கு நன்றி. பலர் நம்மிடம் அன்பு செலுத்தி, நமது வெற்றியை தங்களுடைய வெற்றியாக கொண்டாடும்போது, இந்த வாழ்க்கை ஒரு வரம் என்பதை நினைவுபடுத்திக் கொள்கிறேன்” என்றார்.
மேலும், “பாலாஜி தரணிதரனின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘பத்தா’ வேறுபட்ட கதைக்களம் கொண்ட படம். இதுபோன்ற படங்களில் நடிப்பது எளிதல்ல. நான் மிகவும் எளிதாக நடிப்பதாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு படத்திலும் கஷ்டப்பட்டுத்தான் நடிக்கிறேன். இந்தப் படத்தை நம்பிய அட்லிக்கு நன்றி. அது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய நம்பிக்கை” என தெரிவித்தார்.





















