பணம்… பென்டிரைவ்… பரபர துரத்தல்!
கோடிக்கணக்கான ரூபாய், அதைச் சுற்றி நடக்கும் போட்டி, துரத்தல், அடிதடி என பழக்கப்பட்ட கதைக்களத்துக்குள் புதிய வேகத்தை புகுத்த முயன்றிருக்கிறார் ஜேசன் சஞ்சய்.
கடனில் தவிக்கும் யூடியூபர் சந்தீப் கிஷனின் கையில் எதிர்பாராதவிதமாக ஒரு பென்டிரைவ் கிடைக்கிறது. அதில் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்ட பல கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கண்டெய்னரின் ரகசியம் இருக்கிறது. கண்டெய்னரின் மற்றொரு சாவியும் அவரிடம் வந்து சேர, பணத்தை கைப்பற்ற நினைக்கும் கும்பல் அவரை வேட்டையாடத் தொடங்குகிறது. அவர்களிடம் இருந்து தப்பி பணத்தை சந்தீப் கைப்பற்றினாரா என்பதே மீதிக்கதை.
ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டும் சந்தீப் கிஷன், காதல் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். பரியா அப்துல்லா குறைந்த காட்சிகளிலேயே தனது இருப்பை பதிவு செய்கிறார். சம்பத், ஷிவ்பண்டிட், ஜேக்பி ஆகியோர் வில்லன் கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கின்றனர்.
கிருஷ்ணன் வசந்த்தின் கேமரா சண்டைக் காட்சிகளுக்கு வேகம் கொடுக்க, வெங்கட், சில்வாவின் ஆக்ஷன் காட்சிகள் திரைக்கு பரபரப்பை கூட்டுகின்றன. தமனின் பின்னணி இசை காட்சிகளுக்கு துணை நிற்கிறது. ராஜு சுந்தரத்தின் நகைச்சுவை மட்டும் சில இடங்களில் ரசனைக்கு மாறாக செல்கிறது.
பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும், வேகமான திரைக்கதை மற்றும் அதிரடி காட்சிகளால் ரசிகர்களை கட்டிப்போட முயன்றிருக்கிறது படம்.













