பணிப்பாதுகாப்பு, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் இரவிலும் நீடித்த நிலையில், செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். இடைநிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுவதாகவும், பணி நிலைப்பு மற்றும் ஊதிய உயர்வுக்காக பல ஆண்டுகளாக அவர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 5 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அடக்குமுறையை மேற்கொள்வது நியாயமல்ல என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, நவம்பர் 3-ஆம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக செவிலியர்கள் அறிவித்துள்ளனர். அதற்குள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய சூழலை அரசு ஏற்படுத்தக் கூடாது என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.





















