நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கில் பலர் உயிரிழந்திருப்பது மிகுந்த மன வேதனை அளிப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம். எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் உடனடியாக மீட்பதுடன், அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள் கிடைப்பதை மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம். எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் பலர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இயற்கைப்பேரிடரால் அங்கு பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர்கள் உள்ளிட்ட ஏராளமான இந்தியர்களும் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவிக்கும் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் அடையாளம் கண்டு, அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று, பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உணவு, குடிநீர், பாதுகாப்பான தங்குமிடம், மருத்துவ உதவி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதைஉறுதி செய்வது மிகவும் அவசியம். இதற்காக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ள நிலையில், ஒவ்வொருவரின் நிலை குறித்தும் தமிழக அரசு உரிய தகவல்களை சேகரித்து, சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு முறையாகவும், உடனுக்குடனும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
குறிப்பாக, தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பவர்கள் அல்லது காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் குறித்து தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி, அவர்களை விரைந்து கண்டறிந்து பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்புப் பணிகளின் முன்னேற்றம்குறித்த தகவல்களையும் அவர்களது குடும்பத்தினருக்கு தொடர்ந்து தெரிவிக்க வேண்டும்.
இயற்கைப் பேரிடர் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதுடன், இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளிலும் மத்திய, மாநில அரசுகள் எந்தவித தாமதமும் செய்யக்கூடாது.
வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தங்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
“காணாமல் போனதாகக் கூறப்படும் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு நாடு திரும்ப இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





















