சென்னையில் பேருந்துப் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, ஆலந்தூர் மற்றும் ராயபுரம் உள்ளிட்ட மண்டலங்களில், ஏழு நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி மூலம் இவை அமைக்கப்படுகின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் காவல் ஆணையர் அ.அமல்ராஜ் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பேருந்து நிறுத்தங்களில் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை, கண்காணிப்புக் கேமரா, இலவச வைஃபை, மின்விளக்கு, USB சார்ஜிங் வசதி மற்றும் பேருந்து வழித்தடத் தகவல் திரை ஆகியவை இடம்பெறும். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வுத் தளப் பாதை, பாதுகாப்பான கண்ணாடி மற்றும் வெப்பத்தைத் தாங்கும் கூரை வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.
மக்கள் அதிக நேரம் காத்திருக்கும் இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் செயல்பாட்டைப் பொறுத்து, தேவைப்படும் மற்ற இடங்களிலும் பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி மூலம் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன


















