கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பாமல் காட்டில் தங்கியிருந்த கால்நடைகளைத் தேடுவதற்காக ஆகஸ்ட் 15 அன்று அதிகாலை விவசாயிகள் சிலர் காட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது, மாடுகளைத் தேடிச்சென்றவர்களை எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றியும், மனிதாபிமானம் அற்ற முறையிலும் கர்நாடக வனத்துறையினர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இக்கொடூரத் தாக்குதலில் தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (48), லாசர் குமார் (33) ஆகிய மூவரும்பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுடன் சென்ற மற்றொரு விவசாயியான மகிமைதாஸ் படுகாயங்களுடன் உயிர்பிழைத்து, மைசூரு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சட்டப்பேரவையில் இன்று கர்நாடகத்தின் வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், 3 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.


















