தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில், ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன் மூலம் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41-ல் இருந்து ரூ.44 ஆக உயர்கிறது.
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஆகஸ்ட் 19-ஆம் தேதி பால் கொள்முதல் விலை ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த விலை உயர்வால் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்படும் கூடுதல் செலவை தமிழ்நாடு அரசே ஈடு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு மாதம் சுமார் ரூ.60 கோடியும், ஆண்டுக்கு ரூ.720 கோடியும் கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.


















