தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக், நடிப்பைத் தாண்டி பைக் ரைடிங்கிலும் அதிக ஆர்வம் கொண்டவர். தற்போது தனது ஆர்வத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று, மோட்டார் ஸ்போர்ட்ஸில் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் பைக் ஓட்டுவது, பயிற்சி மேற்கொள்வது என தனது ஆர்வத்தை தீவிரமாக வளர்த்து வரும் கௌதம், பைக் ஓட்டுவதை வெறும் பொழுதுபோக்காக பார்க்காமல் அதன் நுணுக்கங்களையும் கற்று வருகிறார். ஒவ்வொரு பயணத்தின் மூலமும் புதிய அனுபவங்களைப் பெறுவதுடன், தனது பைக்கின் செயல்பாடுகளையும் நன்கு புரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறார்.

‘கோரா’வுடன் ஆவணப்பட வீடியோ!
இந்த ஆர்வத்தின் அடுத்தகட்டமாக, தனது நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து சிறிய ஆவணப்பட வீடியோ ஒன்றை கௌதம் உருவாக்கியுள்ளார். இதில் அவருக்கு மிகவும் பிடித்தமான பைக் ‘கோரா’ முக்கிய இடம்பிடித்துள்ளது.
கௌதம் மற்றும் அவரது நண்பர்களின் பைக் பயணம், தயாரிப்புகள், பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு தருணங்கள் இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு ரைடருக்கும் அவரது பைக்குக்கும் இடையே உருவாகும் நெருக்கத்தையும், பைக் மீதான கௌதமின் ஆர்வத்தையும் இது வெளிப்
படுத்துகிறது.
திரைப்படப் பணிகளுக்கு இடையிலும் மோட்டார் ஸ்போர்ட்ஸுக்காக நேரம் ஒதுக்கி வரும் கௌதம், தொடர்ந்து பயிற்சி பெற்று தன்னை ஒரு ரைடராக மேம்படுத்தி வருகிறார். அவரது இந்த புதிய பயணத்தின் தொடக்கத்தை ‘கோரா’ வீடியோ பதிவு செய்துள்ளது.





















