காங்கிரஸை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் இன்று உடல்குறைவால் சிவகங்கையில் காலமானார். அவருக்கு வயது 78.
சிவகங்கை மாவட்டம் ஏரியூரைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், சட்டம் பயின்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.
1999 முதல் 2004 வரை சிவகங்கை மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்த அவர், 2004 முதல் 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் 2013 முதல் 2014 வரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக சுதர்சன நாச்சியப்பன் பதவி வகித்தார்.
அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சொந்த ஊரான ஏரியூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. செப். 18ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் ஏரியூரில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















