திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக எழுந்த புகாரில், திமுக ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் ராம்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் பங்களாவுடன் கூடிய 7,515 சதுர அடி இடம் கோயிலுக்குச் சொந்தமானது என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த இடம் போலி ஆவணங்கள் மூலம் 2022 டிசம்பர் 5-ல் ரூ.1.45 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் செப்டம்பர் 10-ல் அளித்த புகாரின் அடிப்படையில், ராம்குமார் உள்ளிட்டோர் மற்றும் அப்போதைய ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் என 6 பேர் மீது மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இடத்தில் திமுக அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. சொத்தின் உரிமை, ஆவணங்களின் உண்மைத்தன்மை மற்றும் பத்திரப்பதிவில் சம்பந்தப்பட்டவர்களின் பங்கு குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





















