தேனி மாவட்டம், தேக்கம்பட்டி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் நிலவுவது தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும் கண்காணிப்பில் உள்ள அலட்சியத்தையும் வெளிப்படுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை புழல் சிறையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோடிய நிலையில், தற்போது தேனி மாவட்டச் சிறையில் ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
சிறைகளில் போதுமான காவலர்கள் பணியில் உள்ளனரா, கண்காணிப்புக் கேமராக்கள் முறையாகச் செயல்படுகின்றனவா, கைதிகளைக் கண்காணிக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா எனப் பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
மேலும், சிறை நிர்வாகத்தின் குறைபாடுகளைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டிய அரசு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தப்பியோடிய கைதிகளை விரைந்து கைது செய்வதுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் விஜய் மற்றும் சிறைத்துறைக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.





















