கோவையில் சாதிய பாகுபாடு காரணமாக 11-ஆம் வகுப்பு மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் – கௌசல்யாதேவி தம்பதியின் மகன் அகிலன் (16). இவர் பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளியில் மாணவர்களிடம் கல்வி உதவித்தொகை தொடர்பான விவரங்களைச் சேகரித்தபோது, ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் உணவுப் பழக்கம் குறித்து கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அகிலனைச் சக மாணவர்கள் சிலர் சாதிய ரீதியாக கேலி செய்ததாகவும், அவரை ஒதுக்கி வைத்ததாகவும் அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து வகுப்பாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவரின் தாயார் கௌசல்யாதேவி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி மாணவர் அகிலன் தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பீளமேடு போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் அருண்குமார், வகுப்பாசிரியர் விஜயகுமார் மற்றும் சக மாணவர்கள் இருவர் என மொத்தம் நான்கு பேர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, வகுப்பாசிரியர் விஜயகுமாரை அக்டோபர் 22-ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். மேலும், மாணவரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இன்று (அக்டோபர் 23) பள்ளியின் தலைமை ஆசிரியர் அருண்குமார் மற்றும் வகுப்பாசிரியர் விஜயகுமார் ஆகிய இருவரையும் பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்கள் 15 நாட்களுக்கு சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.





















