வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த சில நாட்களில் வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என்பதால் தமிழகம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (அக்டோபர் 24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து அக்டோபர் 26-ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த வானிலை அமைப்பு புயலாக வலுப்பெறும் பட்சத்தில், அதற்கு வங்கதேசம் பரிந்துரைத்த ‘அர்னாப்’ என்ற பெயர் சூட்டப்படும். மேலும், வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.













