ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் புதிய தேசிய சாதனையுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 54.75 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
இதன் மூலம், இந்திய தடகள ஜாம்பவான் பி.டி.உஷா 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பதிவு செய்த 55.42 வினாடிகள் என்ற நீண்டகால தேசிய சாதனையை வித்யா முறியடித்தார். 2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் வித்யா 55.42 வினாடிகளைப் பதிவு செய்து அந்தச் சாதனையை சமன் செய்திருந்த நிலையில், தற்போது அதையும் கடந்து புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.
வித்யாவின் சாதனையை பாராட்டிய இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா, “சாதனைகள் முறியடிக்கப்படுவதற்காகவே இருக்கின்றன. நாம் ஒருகாலத்தில் நிர்ணயித்த எல்லைகளை அடுத்த தலைமுறை கடந்து செல்வதைப் பார்ப்பதைவிட ஒரு வீரருக்கு பெரிய மகிழ்ச்சி வேறு இல்லை” என்ற கருத்தை தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார். வித்யா தனது நீண்டகால தேசிய சாதனையை முறியடித்தது மிகவும் சிறப்பான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு சாதனையின் உண்மையான பெருமை அது எத்தனை ஆண்டுகள் நீடிக்கிறது என்பதில் இல்லை; அடுத்த தலைமுறை வீரர்கள் அதையும் தாண்டிச் செல்ல அது எவ்வாறு ஊக்கமளிக்கிறது என்பதில்தான் உள்ளது என்ற கருத்தையும் பி.டி.உஷா பகிர்ந்துள்ளார்.
இந்தப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மரியம் கரீம் 54.31 வினாடிகளில் பந்தயத்தை முடித்து தங்கமும், கஜகஸ்தானின் அடெலினா ஜெம்ஸ் 54.58 வினாடிகளில் முடித்து வெள்ளியும் வென்றனர். வித்யா ராம்ராஜ் 54.75 வினாடிகளுடன் வெண்கலம் வென்றார்.





















