சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஒரு மாதத்தில் கடுமையாக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 605 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, ஒரே மாதத்தில் பாதிப்பு இருமடங்குக்கும் அதிகமாகியுள்ளது. செப்டம்பர் 30 அன்று மட்டும் சென்னையில் புதிதாக 72 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் இதுவரை மாநிலம் முழுவதும் சுமார் 18 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக பதிவாகி வருவதால் சுகாதாரத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
சென்னையில் பதிவாகும் டெங்கு பாதிப்புகளில் சுமார் 90 முதல் 95 சதவீதம் வரை லேசான பாதிப்புகளாக இருப்பதாகவும், பெரும்பாலானோர் மருத்துவர் ஆலோசனையுடன் வீட்டிலேயே ஓய்வெடுத்து குணமடைவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 5 முதல் 10 சதவீதம் பேருக்கு மருத்துவமனை அனுமதி மற்றும் தீவிர கண்காணிப்பு தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு பாதிப்பு அதிகரிப்பைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் 3,500-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் கொசுப்புழு ஒழிப்பு மற்றும் வீடு வீடாக ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடுகள், காலி மனைகள் உள்ளிட்ட இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுப்புழுக்கள் உருவாகியுள்ளதா என்பதும் கண்காணிக்கப்படுகிறது.
பொதுமக்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் டயர்கள், உடைந்த பாத்திரங்கள், இளநீர் ஓடுகள், பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக காய்ச்சல், கடுமையான உடல்வலி, வாந்தி, தோலில் தடிப்பு அல்லது ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.





















