தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் வரும் அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, செப்டம்பர் 9-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். செப்டம்பர் 16-ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில், செப்டம்பர் 17-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 19-ம் தேதி கடைசி நாளாகும்.
அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அக்டோபர் 11-ம் தேதியுடன் தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மற்ற 5 தொகுதிகளில் தேர்தல் நடத்துவது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்பதால், தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.





















