பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
பாட்னாவின் காந்தி காட் பகுதியில் கங்கை நதியின் நீர்மட்டம் அபாய அளவை விட சுமார் 1.93 மீட்டர் உயர்ந்து, இதுவரை பதிவான அதிகபட்ச வெள்ள அளவையும் கடந்துள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாட்னா, பகல்பூர், முங்கர், வைஷாலி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. NDRF மற்றும் SDRF குழுக்கள், நூற்றுக்கணக்கான படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பீகாரில் அடுத்த சில நாட்களுக்கும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



















