கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 4,260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செப். 3-ம் தேதி 910, செப். 4-ம் தேதி 740, செப். 5-ம் தேதி 880 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு தினசரி கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விடுமுறையை முடித்து பொதுமக்கள் சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்காக செப். 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 805 சிறப்பு பேருந்துகள் பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கப்பட உள்ளன.
தொடர் விடுமுறையையொட்டி பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தொலைதூரப் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்குமாறு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.


















