கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தொண்டாமுத்தூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாத சூழ்நிலையில், தற்போதுபணியாற்றி வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடியாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
மேலும், கோவை அரசு மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெறும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வசதியையும் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினேன்.கோவை மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் கோவை அரசு மருத்துவமனையை நம்பி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட தேவையான மருத்துவப் பணியாளர்களை அதிகரிப்பதுடன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை போன்ற உயர் சிறப்பு மருத்துவ வசதிகளையும் கொண்டு வந்தால் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, கோவை அரசு மருத்துவமனையின் மருத்துவ சேவைகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார்.


















