தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களை இணைக்கும் கும்மிடிப்பூண்டி – கூடூர் ரயில் வழித்தடத்தில் ரூ.2,229 கோடி மதிப்பில் 3 மற்றும் 4-வது புதிய ரயில் பாதைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை – கொல்கத்தா முக்கிய வழித்தடத்தில் 90 கி.மீ. தொலைவுக்கு இந்தப் புதிய பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இதனுடன் மேற்கு வங்கம், ஒடிசா, தமிழகம், ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் மொத்தம் 410 கி.மீ. தொலைவுக்கு ரூ.9,450 கோடி மதிப்பில் 4 பல வழித்தடத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டங்கள் 2030-31-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 திட்டங்கள் மூலம் 6,448 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 60 லட்சம் மக்கள் நேரடியாகப் பயனடைவார்கள். மேலும், நிலக்கரி, இரும்புத் தாது, சிமென்ட், எஃகு, வாகனங்கள் மற்றும் உணவு தானியங்களை விரைவாக கொண்டு செல்ல முடியும் என்பதால் ஆண்டுக்கு கூடுதலாக 76 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் திறன் கிடைக்கும். ரயில் போக்குவரத்து அதிகரிப்பதன் மூலம் தளவாடச் செலவு குறைவதுடன், சுமார் 13 கோடி லிட்டர் எரிபொருள் இறக்குமதி தவிர்க்கப்பட்டு, 65 கோடி கிலோ கார்பன் உமிழ்வும் குறைக்கப்படும். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் பயண நேரம் குறைந்து, சேவையின் நம்பகத்தன்மையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















