சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டது.
தன் மீதான இந்த தனிநபர் புகார் மனுவை நிராகரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்முடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.பொன்முடிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தற்போது இந்த வழக்கில் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் இன்று (ஆகஸ்ட் 06) பொன்முடி ஆஜராகாததால் நீதிபதி கைது வாரண்ட் பிறப்பித்தார்.




















