தமிழகத்தில் சென்னை பெருநகரப் பகுதி மற்றும் பிற பகுதிகளில் இயங்கும் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆகவும், குறைந்தபட்ச பயணத் தூரம் 1.8 கிலோ மீட்டராகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் பிரிவு 67-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் ரத்து செய்யப்பட்டு, புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டணத்தின்படி, கூடுதலாகப் பயணம் செய்யும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25 வசூலிக்கப்படும். மலைப்பாதைகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.60 ஆகவும், கூடுதலாகப் பயணம் செய்யும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சாதாரண கட்டணத்தைவிட 1.5 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், காத்திருப்புக் கட்டணமாக ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ.1 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





















