நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் செல்போன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனால், ரெயில் பயணிகளின் வசதிக்காக அனைத்து வகையான ரெயில் பெட்டிகளிலும் செல்போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்வதற்கான மின் இணைப்புப் புள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி பயணிகள் தங்களது மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தென்கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் இயக்கப்பட்ட ரெயிலில், பயணி ஒருவர் சார்ஜிங் பாயிண்டில் பவர்பேங்கை இணைத்துவிட்டு தூங்கியபோது அது வெடித்து புகை வெளியேறியது. அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, ரெயில்வே வாரியத்தின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவு அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ரெயில் பெட்டிகளில் உள்ள சார்ஜிங் பாயிண்ட்களின் மின் இணைப்பை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை துண்டிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் சார்ஜிங் வசதி நிறுத்தப்படுவதால் பயணிகள் பாதிக்கப்படலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இதனால், பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவை ரெயில்வே வாரியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





















