சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் திடீரென ஏற்பட்ட சுமார் 10 அடி ஆழப் பள்ளத்தில் சொகுசு கார் ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவான்மியூர் டைடல் பார்க் அருகே மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்று காலை அப்பகுதியில் சாலையின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கி மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.
அப்போது அந்த வழியாகச் சென்ற வெள்ளை நிற சொகுசு கார், எதிர்பாராதவிதமாகப் பள்ளத்தில் விழுந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. காரில் பயணித்த இருவரும் உயிர் தப்பினர். அவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்து தகவலறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ஜேசிபி மற்றும் கிரேன் உதவியுடன் பள்ளத்தில் கவிழ்ந்த கார் மீட்கப்பட்டது.
விபத்து நடந்த பகுதியில் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டது. இதனால் ஓ.எம்.ஆர். சாலை மற்றும் திருவான்மியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலையில் ஏற்பட்ட பள்ளத்தைச் சரிசெய்யும் பணியில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பள்ளம் உருவானதற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளத்தைச் சீரமைத்து, போக்குவரத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















